×

ஐஜி பொன்.மாணிக்கவேல் பணி நீட்டிப்பை எதிர்த்து மேல்முறையீடு: தமிழக அரசு முடிவு

சென்னை: ஐஜி பொன்.மாணிக்கவேலின் பணி நீட்டிப்பு உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளது. தமிழக இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் பல கோடி மதிப்பிலான சிலைகள் காணாமல் ேபானது. இந்த சிலைகள் பெரும்பாலும் வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.இது தொடர்பாக வந்த புகாரின் பேரில் ஐஜி பொன்.மாணிக்கவேல் விசாரித்து வந்த நிலையில் திடீரென ரயில்வே ஐஜியாக மாற்றப்பட்டார். ஆனால், சிலை கடத்தல் குறித்து விசாரித்து வரும் உயர் நீதிமன்றம், ஐஜி பொன்மாணிக்கவேல் கூடுதலாக சிலை கடத்தல் பிரிவு வழக்குகளையும் விசாரிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. மேலும், அவருக்கு உயர் நீதிமன்றத்தில் சிலை கடத்தல் வழக்கு தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்தால் போதும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.   

இதையடுத்து பொன்.மாணிக்கவேல் சிலைகள் காணாமல் போன வழக்குகள் தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடத்தி வந்தார். அதில், சோழர் கால சிலை என்ற பெயரில் ஒரு ஐம்பொன் சிலை மட்டுமே மீட்கப்பட்டது. மற்றப்படி, அவரால் மீட்கப்பட்டது எல்லாம் கற்சிலைகள் தான். மேலும், சிலை கடத்தல் தடுப்பு பிரிவால் 385 சிலைகளை கண்டுபிடிக்க முடியாது என்று கூறி சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரால் அறநிலையத்துறைக்கு சான்றிதழ் அளித்ததாக கூறப்படுகிறது.  இந்நிலையில் சிலை கடத்தலில் சர்வதேச தொடர்புகள் குறித்து விசாரிக்க வேண்டியிருப்பதால் சிபிஐக்கு மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டது. இதை எதிர்த்து வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சிபிஐ விசாரிக்க இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார்.

இதையடுத்து ஐஜி பொன்.மாணிக்கவேல் தொடர்ந்து சிலை கடத்தல் வழக்குகளை விசாரித்து வந்தார். அவர் கடந்த நவம்பர் 30ம் தேதியுடன் பொன்.மாணிக்கவேல் ஓய்வு பெற்றார். இந்த நிலையில், அவருக்கு ஓராண்டு பணி நீட்டிப்பு வழங்க வேண்டும் என்றும், தமிழக அரசே அதற்கான அரசாணையை வெளியிட வேண்டும் என்றும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதற்கிடையே சிலை கடத்தல் தடுப்பு பிரிவுக்கு ஏடிஜிபி அபய்குமார் சிங் நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டது. தொடர்ந்து, அதே பதவிக்கு பொன்.மாணிக்கவேலையும் நியமனம் செய்ய உயர் நீதிமன்றம் தமிழக அரசுக்கு உத்தரவிட்டது. இதனால், ஒரே பதவிக்கு இரண்டு பேர் பொறுப்பு வகிக்கும் சூழ்நிலை  ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் இப்பிரச்னையில், அடுத்த கட்டமாக தமிழக அரசு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து உயர் அதிகாரிகள் சார்பில் அரசு மூத்த வழக்கறிஞர்கள் ஆலோசனை நடத்தினர். இந்த ஆலோசனை கூட்டத்தில் பொன்.மாணிக்கவேல் பணி நீட்டிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வது என்று முடிவு செய்யப்பட்டது. இதற்கான, மனு ஓரிருநாளில் மேல்முறையீடு தாக்கல் செய்யப்படும் என்று கூறப்படுகிறது. மேலும், அரசு சார்பில் மேல்முறையீடு செய்யப்படும் பட்சத்தில் அறநிலையத்துறை அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் இந்த வழக்கில் ஒரு மனுதாரராக தங்களையும் சேர்க்க கோரி மனு தாக்கல் செய்யவும் திட்டமிட்டிருப்பதாக அறநிலையத்துறை உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Tamil Nadu , IG Pon Manaikkavel,Appeal,against,extension,tamil Nadu,government,decision
× RELATED தமிழ்நாட்டில் கருவுற்ற பெண்கள்...